''சம்பந்தனுக்கு அனுதாபம் தெரிவிக்க முடியாதா? '' : சபையில் வாக்குவாதம் செய்த சஜித் : நாளை பாராளுமன்றில் அஞ்சலி


இரா.சம்பந்தனின் மறைவினால்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் நிலவுவதாக சபாநாயகர் மஹிந்த  யாப்பா அபேவர்தன இன்று சபையில் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

அமரர் சம்பந்தனின் மரணம் தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிவிப்பின்போதே  இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,


திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜவரோதயன் சம்பந்தன் காலமானதையொட்டி அரசியலமைப்பின் 66(அ) உறுப்புரைக்கு இணங்க 2024 ஜூன் 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் நிலவுகிறது என்பதை சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

அன்னாரது மரணத்தை நான் மிகுந்த கவலையுடன் சபைக்கு அறிவிக்கின்றேன்.

அது தொடர்பில் நாம் பெரும் கவலை அடைவதுடன் அவரது குடும்பத்தினருக்கும் பாராளுமன்றத்தின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னார் தொடர்பான அனுதாபப் பிரேரணை பிரிதொரு தினத்தில் பாராளுமன்றத்தில் நடத்தப்படும் என்றார்.

இதேநேரம் சம்பந்தனின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக நாளை  பி.ப 2 மணி முதல் மாலை  4  மணிவரை பாராளுமன்ற கட்டடத்தின் முன்பக்கத்திலுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட் தொகுதியினர் மற்றும் பாராளுமன்றத்துடன் இணைந்த சேவைகளின் பணியாளர்களிடம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் கோரிக்கை விடுத்தார்.

இதேநேரம் இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உரையை    நிறைவு செய்த பின்னர் மறைந்த இரா.சம்பந்தனுக்கு அனுதாபம் தெரிவித்து உரையாற்றினார்.

இதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரா.சம்பந்தனுக்கு தானும் அனுதாபம் தெரிவித்து உரையாற்ற முற்பட்டபோது அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க  மறுத்து விட்டார்.
இதன்போது எழுந்த சஜித் பிரேமதாச,

மறைந்த இரா. சம்பந்தனுக்கு சபையில் ஜனாதிபதி மட்டுமா அனுதாபம் தெரிவிக்க முடியும் ? எதிர்கட்சித்தலைவரான என்னால் அனுதாபம் தெரிவிக்க முடியாதா? ஜனாதிபதிக்கு ஒரு கவனிப்பு, எமக்கு ஒரு கவனிப்பா  என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார் .

அதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில்,
 
இரா.சம்பந்தனுக்கு .இன்று அனுதாபம் தெரிவித்து பேசமுடியாது. அதற்கு ஒரு நாள் ஒதுக்கப்படும். அன்று நீங்கள் பேச முடியும் என்றார்.

அப்படியானால் இன்று ஏன் ஜனாதிபதிக்கு அனுமதி கொடுத்தீர்கள்.  இரா.சம்பந்தனுக்காக நாம் ஒரு பிரேரணை கொண்டு வந்து உரையாற்றுவோம் என்றார்.

அதனையடுத்து சபாநாயகர், சரி, இறுதியில் உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன் எனக்கூறிய சபாநாயகர், பிரதான நடவடிக்கைகள் முடிந்த பின்னர் இரா.சம்பந்தனுக்கு அனுதாபம் தெரிவிக்க எதிர்கட்சித்தலைவருக்கு அனுமதி வழங்கினார்.