மேலதிக வகுப்பு நடத்தும் நிறுவனமொன்றில் பெண்கள் கழிவறைக்குள் கெமரா

கம்பஹா நகரில் மேலதிக வகுப்பினை நடத்தும் நிறுவனம் ஒன்றின் பெண்கள் கழிவறையில் கெமரா பொருத்தப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் குறித்த மேலதிக வகுப்பினை இன்று முதல் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், கம்பஹா நகர முதல்வருடன் கலந்துரையாடியுள்ளதாக விசாரணையை முன்னெடுக்கும் காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

இதற்கமைய, நகர முதல்வருக்குள்ள அதிகாரத்திற்கு அமைய விசாரணைகள் நிறைவுறும் வரையில் அந்த நிறுவனத்தினால் நடத்திச் செல்லப்படும் மேலதிக வகுப்பிற்கு தடைவிதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்பினை நடத்தும் குறித்த நிறுவனத்தின் பெண்கள் கழிவறையில் அதி நவீன தொழிநுட்பத்துடன் கூடிய கெமரா பொருத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

மாணவி ஒருவரின் தயார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த கெமரா கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில், இதுவரையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர், ஆசிரியர்கள் மற்றும் மேலதிக வகுப்பில் பங்கேற்ற மாணவர்கள் உள்ளிட்ட 15 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மேலும் 5 மாணவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக அவர்கள் இன்றைய தினம் கம்பஹா காவல்துறைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், மாணவர்கள் சிலரால் குறித்த கெமரா பொருத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.