தமிழ் இனவாதிகளுக்கு துணை போகும் சிறிலங்கா அரசாங்கம் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!


நாட்டில் இன மோதலை உருவாக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் மற்றும் தொல்பொருள் இடங்களுக்கு கடும் எதிர்ப்புக்கள் காணப்படுவதாகவும் அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இனவாத வெறி பிடித்த சில அரசியல்வாதிகளும் தீவிரவாத அமைப்புகளும் திட்டமிட்டு இந்த இடங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமையானது மிகவும் பாரதூரமானது எனவும் தெரிவித்துள்ளார்.

270 வருடங்களுக்கு மேலாக பழமைவாய்ந்த  இலங்கையில், வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலையில் பல சியாமியத் துறவிகள் மற்றும் பௌத்த தூதுக்குழுவொன்று வந்திறங்கிய போது, தமிழ் இனவாத அமைப்புகளின் சில பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் இந்த இடத்திற்கு வந்து கடுமையான எதிர்ப்பை முன்வைத்திருந்தன.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் செயற்படவில்லை என்றால், நாட்டில் ஒரு தீவிரமான மத மற்றும் பிற தேசிய நெருக்கடியை உருவாக்குவதைத் தடுக்க வழி இல்லை எனவும் விசனம் வெளியிட்டுள்ளார்.

எனவே பௌத்த பாரம்பரியத்தை வடக்கிலும் கிழக்கிலும்  பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதுமட்டுமன்றி, வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த புனித ஸ்தலங்களுக்கு எதிராக இனவாத தமிழ் அரசியல்வாதிகளும், தீவிரவாத குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் தற்போதைய அரசாங்கமும் இதில் கவனம் செலுத்தாமல் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இன்று தற்போதைய அரசாங்கத்தில் உள்ள எவரும் இவ்விடயம் தொடர்பில் பேசுவதில்லை.

இன்றைய அரசாங்கம் ஆளுநர்களை நியமிக்கும் போதும் சிங்கள பௌத்த மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. எனவே பௌத்த பாரம்பரியம் வடக்கிலும் கிழக்கிலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாடு முழுவதிலும் உள்ள பௌத்தர்களும் மதவாதிகளுக்கு மட்டுமன்றி சமய ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இவ்வாறான தீவிரவாத அமைப்புகளையும் அடிப்படைவாத மதக் குழுக்களையும் ஒடுக்க வேண்டும் என்பதை அரசாங்கத்திற்கு வலியுறுத்தவும் நினைவூட்டவும் விரும்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.