காலி முகத்திடலில் கொடூர தாக்குதல் - பல்வேறு தரப்பினர்களும் கடும் கண்டனம்


அரசாங்கத்திற்கு எதிராக காலி முத்திடலில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு படையினர் அந்த பகுதியில் இருந்து போராட்டகாரர்களை வெளியேற்றியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தது. ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற நிலையில், நேற்று இரவு காலி முகத்திடல் போராட்ட களத்திற்கு வந்த படையினர் அங்கிருந்த போராட்டகாரர்களை விரட்டியடித்தனர். அத்துடன், கூடாரங்களையும் அகற்றியெறிந்தனர்.

மேலும் போரட்டகளத்தில் இருந்த முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், சர்வதேச ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.


சாரா ஹல்டன்

“காலி முகத்திடல் போராட்ட களத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவத்துள்ளார்.

அத்துடன், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஊடகவியலாளர்கள் இருவருக்கு என்ன நடந்தது

இன்று அதிகாலை 2 மணியளவில் கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இரு ஊடகவியலாளர்கள் விமான படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சரோஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டவர்கள் இதுவரையில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.


அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

அமைதியான போராட்டத் தளமான கோடகோகம காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு, அதைச் சுற்றி வளைத்து, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.


பிமல் ரத்நாயக்க

அமைதியான போராட்டத்திற்கு எதிராக ரணில் மற்றும் ராஜபக்சவின் ஒழுக்கக்கேடான ஆட்சியின் கொடூரமான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  


சர்வதேச சமூகம் கரிசனை

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் சர்வதேச சமூகம் தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

காலி முகத் திடலில் போராட்டம் முன்னெடுக்கப்படு; பகுதில் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு குறித்து இவ்வாறு கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.