இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க அடுத்த வாரம் சட்டமூலம் தாக்கல்!

இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க அடுத்த வாரம் சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நாஃப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலில் வலதுசாரி, இடதுசாரி, அரபு கட்சி என வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சிபுரிந்து வருகின்ற நிலையில், கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மத்தியில் நாஃப்டாலி பென்னட், வெளியுறவு அமைச்சர் யாயிர் லாபிட் ஆகியோர் கூட்டாக இணைந்து நேற்று (திங்கட்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அந்நாட்டில் 3 ஆண்டுகளில் 5ஆவது முறையாக பொதுத் தேர்தல் நடைபெறும்.நாஃப்டாலி பென்னட் யாமீன் கட்சியைச் சேர்ந்தவர். யாயிர் லாபிட், யெஷ் அடிட் கட்சியைச் சேர்ந்தவர். தேர்தல் நடைபெறும்பட்சத்தில் இருவரும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின்படி, தேர்தல் வரை யாயிர் லாபிட் இஸ்ரேலின் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார். அதேவேளையில், நாஃப்டாலி பென்னட் அரசியலில் இருந்து முழுமையாக விலக உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.முன்னதாக, இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை சட்டமூலம் தாக்கல் செய்தது. அந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது.120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நாஃப்டாலி பென்னட் தலைமையிலான அரசு சிறுபான்மை அரசாக உள்ள நிலையில், குழப்பத்தை சரிசெய்து கூட்டணியை ஸ்திரப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை.