காஸா போர் நிறுத்திற்கான பைடனின் 3 கட்ட ஒப்பந்த வரைவு : ஐ.நாவின் ஆதரவை கோரும் அமெரிக்காஇஸ்ரேல் மற்றும் காஸாவுக்கிடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக காஸாவில் நிரந்தரபோர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு சபையிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ் தெரிவித்துள்ளதாவது,

சுமார் 8 மாதங்களுக்கும் அதிகமாக காஸாவில் நடைபெற்று வரும் போரை நிரந்தரமாக நிறுத்துவதற்காக 3 கட்ட போர் நிறுத்த ஒப்பந்த திட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன் முன் வைத்துள்ளார்.

அந்த திட்டத்தின் நகல்கள் ஐ.நா. பாதுகாப்புச் சபையைச் சேர்ந்த 14 உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஏராளமான நாடுகள் அதற்கு தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றன.

எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையும் இதற்கு முழு ஆதரவளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் காஸாவில் போரை நிறுத்துவதற்கும் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை விடுவிப்பதற்குமான மூன்று கட்ட ஒப்பந்தத்தை ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டார்.

அதன்படி முதல் கட்டத்தில் 6 கிழமைகளுக்கு காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு அங்கேயுள்ள இஸ்ரேல் படையினர் வெளியேறுவர்.

அதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களை விடுவிப்பதோடு, அவர்களுக்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளிலுள்ள பலஸ்தீனத்தைச் சேர்ந்த கைதிகள் விடுவிக்கப்படுவர்.

இதன்போது, உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்கள் அவர்கள் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படும்.

மேலும் காஸாவுக்குள் 600 நிவாரண லொறிகள் வருவதற்கு அனுமதிக்கப்படும்.

இரண்டாவது கட்டத்தில் எஞ்சிய  பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு, இஸ்ரேல் படையினர் அனைவரும் வெளியேறுவார்கள்.

ஹமாஸ் அமைப்பினர் அவர்களது வாக்குறுதிகளை மீறாத வரையில் அங்கே போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கும்.

மேலும் மூன்றாவது கட்டத்தில் காஸாவில் மறுகட்டமைப்பு பணிகள் பெரிய அளவில் முடுக்கி விடப்படும்.

இந்த ஒப்பந்ததை ஹமாஸ் அமைப்பினருக்கு அனுப்பி வைத்த ஜோ பைடன் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதனை ஹமாஸ் அமைப்பு நேர்மறையாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த திட்டங்கள் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதற்கு தங்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க மேற்குறித்த ஒப்பந்தத்துக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையும் ஆதரவளிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.