தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான பெக்கோ சமனின் முக்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்பிலிப்பிட்டிய - கங்கேயாய பகுதியில் வைத்து குறித்த நபரை மேற்கு வடக்கு குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
டீ-56 ரக துப்பாக்கி, 2 மகசின்கள், 97 தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த சீருடையுடன் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது
இதேநேரம் கொழும்பு - பொரளை பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அம்பாறை, தமன பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் 10 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டு தமன காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்று மூவரைக் காயப்படுத்திய குற்றம் குறித்து ஜயவர்தனபுர பொலிஸ்விசேட அதிரடிப்படையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவு விசாரணைகளைத் தொடங்கியது.
அதன்படி, நேற்று (12) மதியம் தமன பொலி;ஸ் பிரிவில் இந்தக் குற்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை அந்தப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் முன்னர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், 2015 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்றும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.