மஹிந்தவின் அண்ணன் மகனுக்கு பிணை நிராகரிப்பு... 'ஆதாரங்கள் உள்ளன.." என நீதிபதி அறிவிப்பு, ராஜிதவுக்கும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டார்.

பிணை மனு மீதான உத்தரவை அறிவித்த நீதவான், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 186 இன் படி சந்தேக நபரை, இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகக் நீதிபதி கூறியுள்ளார்.

பொதுச் சொத்துச் சட்டத்தின் பிரிவு 8(1) இன் கீழ் சந்தேகநபர் தொடர்பாக திருப்திகரமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், தொடர்புடைய பிணை விண்ணப்பத்தை நிராகரித்து சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை முடியும் வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கோரியிருந்தது.

இருப்பினும், விசாரணை முடியும் வரை சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட மாட்டார் என்றும், அடுத்த நீதிமன்றத் திகதி வரை மாத்திரமே அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்றும் நீதவான் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பதிவு செய்யப்படவுள்ள சாட்சிகளின் சாட்சியங்களின் அறிக்கையை அடுத்த நீதிமன்றத் திகதியில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டார்.


இதேநேரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள், தங்களது பதவி காலத்தில் மேற்கொண்டதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டுப் பயணத்துக்காக, அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால், முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது வேறு எவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படும் என்று அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் தற்போது வரையில் யாருக்கும் எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதா என்பதை அரசாங்கத்தரப்பு தெரிவிக்கவில்லை.

இதேநேரம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.