''டிரைவர் பிரேக் இல்லை என்றார்.. பொய் சொல்ல வேண்டாம்.." என சிரித்தோம்.. " உயிர் தப்பியவர் அதிர்ச்சி வாக்குமூலம்


பதுளை, எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

11 ஆண்களும் 7 பெண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 05 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
 

பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், பேருந்து விபத்து நடந்த இடத்தில் இருந்த மோசமான நிலைமைகள் காரணமாக, அந்தக் குழுவை மீட்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதேநேரம் குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


விபத்து இடம்பெற்றபோது மீட்பு பணிகளுக்காக, இலங்கை விமானப்படையின் விசேட மீட்புக் குழுவையும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மேலும், கண்காணிப்பு நோக்கங்களுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பீச்கிராஃப்ட் விமானம் நேற்று பயன்படுத்தப்பட்டது.

விபத்து இரவில் நடந்ததால், மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக இருந்த நிலையில், விமானம் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.

இதேநேரம் இந்நிலையில் நேற்று இரவு அங்கிருந்த விளக்குகள் கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு குழுவினர் இன்றி போராடிய சந்தர்ப்பத்தில் இந்த இரவில் யாரால் சென்று காப்பாற்ற முடியும் என வினவிய போது பிரதேச மக்கள் நாங்கள் சென்று மீட்கிறோம் என தைரியமாக தெரிவித்துள்ளனர்.



அதற்கமைய, கயிறுகளுடன் சென்று பலமணி நேரம் போராடிய மக்கள் சடலங்களை தோளில் சுமந்துக் கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்ற சென்ற இருவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதிக இருள் சூழ்ந்த பகுதியில் அந்த பகுதி மக்கள் காப்பாற்ற முன்வந்ததற்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் மீட்பு பணிகளுக்காக சென்ற இராணுவ வீரர் ஒருவர் கயிறு அருந்ததில் கீழே விழுந்து மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த கோர விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணி ஒருவர் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


நான் சாரதியின் அருகில் அமர்ந்து கதை;துக்கொண்டிருந்தேன். இதன்போது பிரேக் இல்லை என்று சாரதி கூறினார். இதன்போது நடத்துனரும்; நாங்களும்; சிரித்தோம். அங்கிருந்த ஒருவர் பொய் கூற வேண்டாம் என்று கூறினார். இரண்டாவது வளைவு வரும் போது உண்மைக்கும் பிரேக் இல்லை என்று மீண்டும் கூறி பேருந்தை திருப்ப முயற்சித்தார். இதன் பிறகே உண்மையிலும் பேருந்தில் பிரேக் இல்லை என்பதை அறிந்தோம். இதன்போது எதிர் திசையில் வாகனம் ஒன்று வந்ததது. அதில் மோதியே பேருந்து பள்ளத்தில் வீழ்ந்தது. எல்லாம் முடிந்து விட்டது என எண்ணினேன். சுய நினைவு வந்து கண்முழித்து பார்க்கும் போது நான் இன்னும் உயிருடன் இருக்கின்றேன். விபத்துக்குள்ளாகி ஒரு மணிநேரம் வரை எனக்கு சுய நினைவு இருக்கவில்லை. ஒரு சிறு பிள்ளை அழும் சத்தத்தை கேட்டே எழுந்தேன். உடனே அந்த சிறுபிள்ளையை கையில் ஏந்தி எழுந்திட முயற்சித்தேன். இருப்பினும் என்னால் முடியாமல் போய்விட்டது. இதன் பிறக்கு உதவிக்கு வருமாறு சத்தமிட்டேன் என்றார்.