குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM எனப்படும் மொத்த கொழுப்பு உள்ளடக்கம் மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் பலர் ஈடுபட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான சவர்க்காரங்களுக்கு SLS சான்றிதழைப் பெறுவது கட்டாயமில்லை என்பதால், சில நிறுவனங்கள் TFM மதிப்பில் குழந்தை சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுள்ளன.
இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி, இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சவர்க்காரங்களின் TFM பெறுமதி 78 ஆக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் உள்ள பிரதான சவர்க்கார உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சவர்க்காரத்தை நுகர்வோர் விவகார அதிகாரசபை பரிசோதித்த போது அதன் TFM பெறுமதி 63 என கண்டறியப்பட்டுள்ளது.
இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நிலை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஜூலை 6ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், நிறுவனம் தவறை ஒப்புக்கொண்டிருந்தது.
எனவே குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை வாங்கும் போது மிக அவதானமாக செயற்படுமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.