கைதுசெய்யப்பட்ட வெடுக்குநாறி ஆலய பூசகரும் நிர்வாக உறுப்பினரும் நீதிமன்றால் விடுவிப்பு


வவுனியா பொலிசாரால் இன்று காலை கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஆகியோர் வவுனியா நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் அண்மையில் உடைத்து அழிக்கப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது.

எனினும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்ட போது நீதிமன்ற உத்தரவு கருத்தில் கொள்ளப்படாமல் தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக தெரிவித்து நெடுங்கேணி பொலிசாரால் ஆலயபூசாரியும், நிர்வாக உறுப்பினர் ஒருவரும் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந் நிலையில் குறித்த வழக்கிலிருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் வவுனியா சட்டத்தரணிகள் பலர் ஆலயம் சார்பில் ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஏஸ்ட சட்டத்தரணி தி. திருவருள் குறித்த வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும் பூசாரியும் இருப்பதனால் அதே வழக்கில் அவர்களை சந்தேக நபர்களாக பெயரிடுவது வழக்கிற்கு முரணாக அமையும் என்பதை சுட்டிக்காட்டிய நீதவான் வழக்கிலிருந்து அவர்களை விடுவித்திருந்தார்.

அத்துடன் ஆலயத்தில் கட்டுமானங்களையோ மாற்றங்களையோ ஏற்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பூஜை வழிபாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை இறை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை விரைந்து எடுக்குமாறும் பொலிசாருக்கு பணிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.