எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் அடாவடி - உலகநாடுகளால் கைவிடப்படும் நிலையில் இலங்கை


எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் வெளியானதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நாட்டில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சமுக ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடாபில் மேலும் தெரியவருகையில், 

எரிபொருள் நிரப்பு நிலையங்களை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினருக்கு பதிலாக இராணுவத்தினரை அனுப்பியதன் மூலம் இலங்கை, உலக நாடுகளின் முன், மிக மோசமான தேசமாக முத்திரை குத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இராணுவத்தினரின் இந்த செயற்பாடு மேலும் மோசமான விளைவுகளை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருள் கேட்ட நபரை எட்டி உதைக்கும் இராணுவ அதிகாரி ஏற்கனவே குற்றச்சாட்டில் சிக்கியவர் என தெரியவந்துள்ளது. இராணுவ அதிகாரி பணி என்பது மிகவும் மனிதாபிமானமிக்க ஒரு பணியாகும்.

அதனை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என சிரேஷ்ட மனித உரிமை அதிகாரி ரஞ்சித் கீர்த்தி தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ, வாரியபொல, கம்பஹா உட்பட நாடு முழுவதும் இராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு அந்தந்த இராணுவத் தலைவர்களே நேரடியாகப் பொறுப்பாளிகள் என்பதை இந்த சம்பவம் சுட்டிகாட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தற்போது வரையிலும் உலக நாடுகளிடமிருந்து மனிதாபிமான உதவிகளையே பெற்று வருகிறது. வரிசையில் நிற்கும் மிகவும் ஏழ்மையான மக்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த உதவிகளை வெளிநாடுகள் மேற்கொள்கின்றன.

இவ்வாறான நிலையில்,  அரசாங்கப் படைகள் ஏழை மக்களைத் தாக்கும் போது, ​​ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மாத்திரமின்றி தமிழகத்திலிருந்தும் உதவிகளை நிறுத்த கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் இராணுவத்தால், காவல்துறை, அரசாங்க அதிகாரிகள் மீது, வெளிநாட்டவர்கள் மீது மற்றும் குடிமக்கள் மீதான தாக்குதல்களுக்கு முப்படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அரச தலைவர் ஆகியோர் நேரடி பொறுப்பை ஏற்க வேண்டும் என தென்னிலங்கை ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.