இந்திய ஊடகங்களில் பேசுபொருளான அநுரவின் கச்சத்தீவு விஜயம்!

தென்னிந்திய நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசிய பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு விஜயம் செய்ததாக தென்னிந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல்வேறு நலத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காகவும் மயிலிட்டி கடற்படை துறைமுக விரிவாக்கத்தை மேற்பார்வையிடவும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது, ஊடகங்களிடம் பேசிய ஜனாதிபதி, கச்சத்தீவை எந்தவொரு செல்வாக்கிற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என கூறியிருந்தார்.

இதனையடுத்து, ​​அவர் கடற்படை படகில் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் கச்சத்தீவுக்கு சென்றிருந்தார்.

இதன்போது, கச்சத்தீவு நமது கடற்றொழிலாளர்களுக்கு முக்கியமான இடம் எனவும் எதிர்கால சந்ததியினருக்காக நமது நாட்டையும், தீவுகளையும், கடல் எல்லைகளையும், வானத்தையும் பாதுகாப்பது எனது பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் மோடியிடம் பகிரங்கக் கோரிக்கை விடுதத்தன் பின்னர், இந்த விஜயம் நடந்துள்ளது.

இந்நிலையில், குறித்த விஜயம் இந்தியாவின் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.