முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை புறக்கணித்த அநுர அரசு: இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டு

புதிய அமைச்சரவையில் முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இம்ரான் மகரூப்(Imran Maharoof) சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று(19.11.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புதிய அமைச்சரவை

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முஸ்லிம் மக்களும் இந்நாட்டின் பிரஜைகள். அந்த வகையில் இந்த சமூகமும் ஏனைய சமூகங்களைப் போன்று கௌரவத்துடன் இந்நாட்டில் வாழ விரும்புகின்றது. 

இந்நாட்டின் சுதந்திர காலம் தொட்டு நியமிக்கப்பட்டு வந்த அமைச்சரவையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்து வந்துள்ளது.

 இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக புதிய அரசாங்கம் நியமித்த அமைச்சரவையில் முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

இதனால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சமுகம் மிகுந்த கவலை கொண்டுள்ளது. சமுக வலைத்தளங்களை அவதானிக்கின்ற போது இதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

இந்த அரசாங்கத்தின் கடந்த குறுகிய கால செயற்பாடுகள் சிலவற்றை பாரக்கும் போது முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம்

இலங்கையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் அந்த மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட 6 தவிசாளர் பதவிகளில் எந்தவொரு முஸ்லிம் தவிசாளரும் நியமிக்கப்படவில்லை. இந்த விடயம் பேசு பொருளான பின்னர் ஒரு முஸ்லிம் தவிசாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற 18 தேசியப்பட்டியல் ஆசனங்கள் தொடர்பான பெயர்ப் பட்டியல் முன்னர் வெளியிடப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரதும் பெயர் வெளிவரவில்லை.

பின்னர் இதுவும் பேசுபொருளான பின்னர் ஒரு முஸ்லிம் உறுப்பினரது பெயரோடு புதிய பட்டியல் வெளியானது.

அந்த வரிசையிலேயே இப்போது இந்த அரசாங்கம் நியமித்துள்ள அமைச்சரவையில்முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. 

முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேசத்தை விதைத்து ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சரவையில் கூட முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த உதாரணங்களை வைத்து நோக்கும் போது இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இருப்பது போலவே எனக்குத் தோன்றுகின்றது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் அளிக்கப்பட்டுள்ள சுமார் 15 இலட்சம் முஸ்லிம் வாக்குகளுள் சுமார் 10 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் திசைகாட்டிக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள வாக்கு விபரங்களை நுணுகி ஆராய்கின்ற போது இந்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம்.

முஸ்லிம்களின் இந்தளவு பெரிய எண்ணிக்கை வாக்குகளைக் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளையும் புரிந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ”என அவர் தெரிவித்துள்ளார்.