தடுப்புகாவலில் வைக்ப்பட்டுள்ள பிள்ளையானின் வாக்குமூலத்திற்கமைய கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோவிலில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இனியபாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, அவரின் சாரதியாக செயற்பட்டவரும் கல்முனையில் வைத்து நேற்று திங்கட்கிழமை அதிரடியாக கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
கனகர் வீதி தம்பிலுவில் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் என்ற சாரதியே குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2007 2008 மற்றுமு; 2009 காலப்பகுதியில் இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அவர் பொத்துவில்-மட்டக்களப்பு வழித்தட பஸ் சாரதியாக செயற்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திங்கட் கிழமை பொத்துவில் பகுதியில் இருந்து வழமை போன்று கல்முனை ஊடாக மட்டக்களப்பிற்கு செல்லும் போது, கல்முனை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் ஒழிந்திருந்த குற்றப்பலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைக்காக அம்பாறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சட்டவிரோத துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல்;, பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்பு உள்ளதாக என்ற சந்தேகத்தின் பேரில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாற மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி மிந்த ராஜபக்ஷவின் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றிய இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார அவரது சகா தச.தவசீலன் மற்றும் சாரதி அழகரட்ணம் யுவராஜ் ஆகியோயரின் கைதுகள் கிழக்கு மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது