களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்காக களுத்துறை வீட்டிற்கு சென்றவேளை மகளும் அவரது கணவரும் வீட்டில் இருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத பாகங்கள் சேர்க்கப்பட்ட ஜீப் குறித்து நடந்த விசாரணையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான, 19ஆம் திகதி மதுகம நகரில் பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
ரசிக விதானவிடம் இடம்பெற்ற விசாரணையில் அந்த ஜீப், ரோஹித அபேகுணவர்தனவின் மகளிடமிருந்து வாங்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்கு பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்ற வேளையில் அவர் தலைமறைவாகியிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இதேநேரம் நாட்டிற்குள் கடத்தப்பட்டு மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட சொகுசு ஜீப், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுடன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு விற்றதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த அறிக்கையின்படி, இந்த வாகனம் ஆரம்பத்தில் மெலனி அபேகுணவர்தன என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் 2024 அக்டோபரில் பாராளுமன்ற உறுப்பினர் விதானவின் மகனுக்கு விற்கப்பட்டது.
குறித்த ஜீப் ரூ.45 மில்லியனுக்கு வாங்கப்பட்டதாக விதான தெரிவித்திருந்தாலும், ஆவணங்களில் அறிவிக்கப்பட்ட மதிப்பு ரூ.20 மில்லியன் மாத்திரமே என்றும், ஆவணக் கையாளுதல் அல்லது வரி ஏய்ப்புக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயத்தை விசாரித்து வரும் மத்திய ஊழல் தடுப்புப் பணிக்குழு, இந்த வாகனம் இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகவும், மோட்டார் போக்குவரத்துத் துறையின் அமைப்பில் உள்ள அதன் தரவு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது.
வாகனத்துடன் தொடர்புடைய எந்த முறைகேடுகளும் தங்களுக்குத் தெரியாது என்றும், அது ஒரு சாதாரண, சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட வாகனமாக நல்லெண்ணத்துடன் வாங்கப்பட்டது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.