12 நாட்களாக கரைக்கு திரும்பாத 4 கடற்தொழிலாளர்கள் : பருத்தித்துறை பகுதியில் சம்பவம்



யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் சுமார் 12 நாட்களுக்கு மேலாக கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வல்வெட்டித்துறை , முள்ளியான் , கல்முனை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 04 கடற்தொழிலாளர்களும் கடந்த 07ஆம் திகதி  படகொன்றில் கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர்.

தொழிலுக்கு சென்ற நால்வரும் 05 தினங்களுக்குள் கரை திரும்பி இருக்க வேண்டும்.
ஆனாலும் அவர்கள் 12 நாட்களாக கரை திரும்பவில்லை என பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்தொழிலாளர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பருத்தித்துறை பொலிஸார் கடற்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ள நிலையில் கடற்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேநேரம் ஹைதி நாட்டிலிருந்து அகதிகள் சிலருடன் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவை நோக்கி புறப்பட்ட படகு ஒன்று திடீரென தீப்பிடித்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் படகில் இருந்தவர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி தாங்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த போது எரிபொருள் நிரப்பப்பட்ட கொள்கலன்களில் தீப்பிடித்து எரிந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் வெளிநாட்டு செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.