22ம் திகதி 33 கோடி டொலர் கிடைக்கும் - இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்


கொழும்பு, மார்ச் 18 இலங்கைக்கு கடன் அளிப்பதற்கான உடன்படிக்கை குறித்த ஐ. எம். எப்வின் அறிவிப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வெளியாகும்.

அத்துடன், முதல் தவணையாக 33 கோடி அமெரிக்க டொலர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையுடன், சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்படிக்கை கடந்த 2022 செப்ரெம்பர் முதலாம் திகதி எட்டப்பட்டது. இது, இலங்கைக்கு 290 கோடி டொலர்கள் கடன் கிடைக்க வழிவகை செய்தது. ஆனால், இருதரப்பு கடன் மறுசீரமைப்பில் இழுபறி நீடித்தது.

இந்த வருடத்தில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களும் கடனை மறுசீரமைக்க உறுதியளித்தனர்.

இதையடுத்து, சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் நிறைவேற்றுசபை வரும் நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கைக்கு கடன் வழங்குதற்கான அனுமதியை வெளியிடவுள்ளது.

அத்துடன், உலக வங்கி, ஆசிய அபி விருத்தி வங்கி உள்ளிட்ட கடன் வழங்கு நர்களின் நிதியுதவியும் ஊக்குவிக்கப் படும். மேலும், சர்வதேச நாணய நிதியத் தின் நிர்வாகக் குழு, நான்கு ஆண்டுகளில் ஒன்பது தவணை கடனின் முதல் தவணையை வெளியிட ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் முதல் தவணையாக எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு 33 கோடி டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனஇராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதேசமயம் இலங்கை, 17ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாட்டானது, அதிகாரிகளின் இலட்சிய சீர்திருத்தங்கள் திட்டத்துக்கு ஆதரவளிக்கும்.

இது இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வலுவான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.