மும்பையில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது மூன்று டயர்கள் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளது.
காலை 9.27 மணியளவில் விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், தரையிறங்கிய விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்று நின்றுள்ளது.
உடனடியாக அவசரகால நடவடிக்கையை மேற்கொண்ட விமான நிலைய பாதுகாப்புக் குழு, விமானத்தை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுவந்து பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றியது.
இதன்போது விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாகவும், ஒரு என்ஜின் ஓடுபாதையில் மோதி சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தை உறுதிபடுத்தும் விதமாக ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், கடும் மழை காரணமாக விமானம் ஓடுபாதையைத் தாண்டிச் சென்றதாகவும், பின்னர் விமான ஊழியர்களும், பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்
“கொச்சியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையைக் கடந்து சென்றது. இதையடுத்து விமான நிலையத்தின் அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக பயணிகளை மீட்கும் பணியைத் தொடங்கியது. அனைத்து பயணிகள், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையான 9 கீழ் 27 சிறிதளவு சேதமடைந்துள்ளது. உடனடியாக, இரண்டாவது ஓடுபாதையான 14 கீழ் 32 செயற்பாட்டுக்கு கொண்டுவரப்படுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இதனால், விமான நிலையத்தில் சேவை சிறிதளவு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.