சர்வதேச கிரிக்கெட் சபை(ஐ.சி.சி), இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்காவிட்டால் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை நாடு இழக்க நேரிடும் என்று இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஏறத்தாழ, ஐந்து மாதங்களுக்கு முன்பு, இலங்கை கிரிக்கெட் மீதான அரசியல் தலையீடுகள் பற்றிய தகவல் வெளியானபோது, ஐ.சி.சி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதாகவும் ஷம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூறுகையில், “இந்த அரசியல் தலையீடுகள் குறித்து, ஐ.சி.சி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா அதிக கவனம் செலுத்தியிருந்தார்.
கவாஜா, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து கிரிக்கெட்டி மீதான அரசியல் தலையீடுகள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், ஐ.சி.சி தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எச்சரித்திருந்தார்.
ஜூலை 10 முதல் 14 வரையான ஐ.சி.சி கூட்டத்திற்கு நான் சமூகமளித்திருந்தபோது, ஐ.சி.சியின் அறிக்கையில் இலங்கை கிரிக்கெட்டில் முற்றிலுமாக அரசியல் தலையீடு காணப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்காக இலங்கையில் கிரிக்கெட்டை தடைசெய்ய வேண்டும் அல்லது இலங்கைக்கான நிதி, முடக்கம் செய்யப்பட வேண்டும் என ஐ.சி.சி அப்போது கூறியிருந்தது.
எனினும் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக்கொண்டு அதை தடுத்தோம்” என்றார்.
அதேவேளை, இலங்கை கிரிக்கெட் மீதான தற்போதைய தடை நீக்கப்படாவிட்டால், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இலங்கையில் நடத்துவது குறித்து, நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஐ.சி.சியின் அடுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றதாகவும் ஷம்மி சில்வா மேலும் கூறியுள்ளார்.