118 கோடி ரூபா : இராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பில் முக்கிய தகவல்

 


இந்தியாவின் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கு இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க, தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாவுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாவில் மத்திய அரசின் ஊடாக பணிகள் நடந்து வருவதாகத் தமிழக செய்திகள் கூறுகின்றன.
இருப்பினும், மத்திய அரசாங்கத்திடம் இருந்து இன்னும் சேவைக்கான அனுமதி கிடைக்கவில்லை.

அதேநேரம், தலைமன்னாரிலும் கப்பல் சேவைக்கான ஆயத்தப்ப ணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் தமிழக அரசு தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

முன்னதாக, தமிழகத்தின் தனுஸ்கோடியில் இருந்து, இலங்கை தலை மன்னார் வரை, 1914 முதல் கப்பல் போக்குவரத்து இடம்பெற்று வந்தது.
எனினும், 1964 ஆம் ஆண்டு வீசிய கடுமையான புயல் காரணமாக, தனுஸ்கோடி கடலில் கப்பல் மூழ்கியதால், அந்த சேவை நிறுத்தப்பட்டது.

 பின்னர், இராமேஸ்வரம்  தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்து இடம்பெற்று வந்தநிலையில், இலங்கையின் போர் காரணமாக, 1984ஆம் ஆண்டு மத்தியஅரசால் அந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில், தற்போது இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டால், ஒரு மணி நேரத்திற்குள் தலைமன்னார் சென்றுவிட முடியும் என்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது