'இலங்கை எமக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளது.." : ஐ.எம்.எப். தகவல்

அரசாங்கத்தின் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் எஞ்சியுள்ள செலவினத்தொகை குறித்து தவறான தகவல்கள் இலங்கையினால் வழங்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்திட்டம் குறித்த நான்காம் கட்ட மீளாய்வு தொடர்பில் நாணய நிதிய அதிகாரிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இந்நிலையில் அந்த இணக்கப்பாட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து தெளிவுப்படுத்தும் நோக்கில் நேற்று வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 05 மணிக்கு வொஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்ட பிரதானி எவான் பபஜோர்ஜியோ கருத்து வெளியிட்டார்.

அரசாங்கத்தின் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் எஞ்சியுள்ள செலவினத்தொகை குறித்து தவறான தகவல்கள் இலங்கையினால் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாணய நிதிய பணிப்பாளரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை பணிப்பாளர் சபையினால் ஆராயபட்டது.

தெளிவான வரவு செலவுத் திட்ட எல்லை பகுப்பாய்வின் ஊடாக கண்டறியப்பட்ட இத்தவறான தகவல்கள்,சர்வதேச நாணய நிதிய செயற்திட்டத்தின் 8 ஆம் சரத்தின் 5 ஆம் பிரிவுக்கமைய இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகள் மீறப்பட்டுள்ளமையை காண்பிக்கின்றன.

அதனையடுத்து அத்தகவல்களை சீரமைத்து சரியான தகவல்களை வழங்குவதில் இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் மிக நெருங்கி ஒத்துழைப்புடன் பணியாற்றினர்.

அதேவேளை நாணய நிதிய செயற்திட்டத்தின் கீழான இலங்கையின் செயற்பாடுகள் வலுவானவையாக அமைந்திருப்பதுடன், அச்சுறுத்தலுக்குரிய சில அமுலாக்கங்கள் உரியவாறு கையாளப்பட்டுள்ளன.

பொருளாதார வளர்ச்சி,பணவீக்க வீழ்ச்சி, உயர் வெளிநாட்டு கையிருப்பு,நிதியியல் வருமானத்தில் முன்னேற்றம் என்பவற்றுடன் மறுசீரமைப்புக்கள் செயற்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடன் மறுசீரமைப்பு செயன்முறை பூர்த்தியடையும் தருவாயில் உள்ளது.பொருளாதாரம் சார்ந்த கண்ணோட்டம் நேர்மறையானதாக இருப்பினும் மறுபுறம் அச்சுறுத்தல்களும் காணப்படுகின்றன என்றார்.