'சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது..!" - அமெரிக்க ஆவேசம்!


சீனாவில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி, சீன, ரஷ்ய ஜனாதிபதிகளுடன் சிரித்து பேசிய புகைப்படம் வைரலான நிலையில் அதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கருத்து வெளியிடுகையில்
“இந்த சந்திப்பு வெறுப்பூட்டுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமரான மோடி, உலகின் 2 பெரும் சர்வதிகாரிகளான புடின் மற்றும் ஜின்பிங்குடன் ஒன்றாக நிற்பது வெட்கக்கேடானது.

பிரதமர் மோடி தான் இருக்கு வேண்டியது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரேனுடன் தான். ஆனால் ரஷ்யாவுடன் அல்ல என்பதை புரிந்து கொள்வார் என நம்புகிறோம்.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு சீனா உதவியுள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறியுள்ளது. ஆனால் இந்திய வணிகர்களோடு கொஞ்சி குலாவுகிறது.

சீனாவின் உறவு நச்சுத்தன்மை வாய்ந்தது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியாதான். ஆனால் அதை ஏற்க அவர்கள் மறுக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியா-அமெரிக்க கூட்டமைப்பின் இணை தலைவருமான ரோ கன்னா,

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் கொள்கைகள் இந்தியாவுடனான உறவுகளை பாதிப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

ட்ரம்ப்பின் ஈகோ காரணமாக, பலஆண்டுகளாக பலப்படுத்தப்பட்ட உறவு சிதைந்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
 
இந்தியா மீது ட்ரம்ப் விதித்திருக்கும் 50வீத வரி, பிரேசிலை தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாகும். இது சீனா மீது விதிக்கப்பட்ட வரியைவிடவும் அதிகம்.
 
டிரம்ப்பின் இந்த வர்த்தக கொள்கைகள், இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை நோக்கித் தள்ளும் என்று ரோ கன்னா எச்சரித்துள்ளார்.
 
இந்த வரிவிதிப்பு அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கும், இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதியையும் பாதிக்கிறது.

ட்ரம்ப்பின் ஈகோ, இந்தியா-அமெரிக்கா உறவை அழித்துவிட அனுமதிக்க முடியாது. உலகை அமெரிக்காதான் வழிநடத்துகிறது, சீனா அல்ல என்பதை உறுதி செய்ய இது மிகவும் முக்கியம்," என்று ரோ கன்னா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.