'இஸ்ரேலே சூத்திரதாரி.., அமெரிக்கா அல்ல.." : ஈரான் அதிரடி குற்றச்சாட்டு



ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான வெற்றிகரமான பேச்சுவார்த்தைத் தொடரை இஸ்ரேல் நாசப்படுத்தியதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி குற்றம் சாட்டியதாக நியூஸ் வீக் செய்தி வெளியிட்டுள்ளது

டொனால்ட் ட்ரம்பின் சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப்புடன் ஒன்பது வார காலப்பகுதியில் ஐந்து பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், முக்கியமான ஆறாவது சந்திப்புக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு இஸ்ரேல் ஈரானை தாக்கியபோது பேச்சுவார்த்தைகள் முறிந்ததாகவும் வெளியுறவு அமைச்சர் கூறியதாக நியூஸ் வீக் செய்தி வெளியிட்டுள்ளது.

 ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் நான்கு ஆண்டு பேச்சுவார்த்தைகளை விட அமெரிக்க பிரதிநிதியுடனான பேச்சுவார்த்தைகள் அதிக முன்னேற்றம் அடைந்ததாகவும் அப்பாஸ் அராச்சி கூறினார்.


இஸ்ரேல் தமது அணுசக்தி நிலையங்கள், வீடுகள், மருத்துவமனைகள், முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் சிறைச்சாலைகளில் கூட குண்டுவீசி இராஜதந்திரத்தை காட்டிக் கொடுத்ததாக குற்றம் சாட்டிய ஈரானிய வெளியுறவு அமைச்சர், தீர்வுகளை விட மோதல்களை விரும்பும் ஒரு நாடு இஸ்ரேல் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நட்பு நாடாக நடிக்கும் ஒரு அரசால் ஈரான்-அமெரிக்க பேச்சுவார்த்தைகளின் வெற்றி நாசமாக்கப்பட்டது. ஐ.நா. மேற்பார்வையின் கீழ் அமைதியான அணுசக்தி திட்டத்திற்கு ஈரான் எப்போதும் உறுதிபூண்டுள்ளது. "முழு அளவிலான பிராந்தியப் போரைத் தடுக்க நாங்கள் பொறுப்புடன் செயல்படவும் உறுதிபூண்டுள்ளோம். அதை பலவீனமாக தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

 எதிர்காலத்தில் ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலையும் தோற்கடிக்க நாங்கள் தயங்க மாட்டோம். மேலும் இதுபோன்ற மோதல் மீண்டும் ஏற்பட்டால், ஈரான் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நாங்கள் அறிவோம்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் நியூஸ் வீக் செய்தித்தாளில் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.