'ஒன்றிணைய தயார்..." ரணிலை பார்வையிட்ட பின்னர் முக்கிய தகவலை வெளியிட்ட சஜித்


 
 

நாட்டின் அபிவிருத்திக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் அனைத்து முற்போக்கு சக்திகளுடனும் கொள்கை ரீதியில் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயார். இந்த ஒற்றுமை நாட்டுக்கு பெருமை சேர்க்கும் அதேவேளை, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதாகவும் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் என்னால் எதுவும் கூற முடியாது.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு தேவையான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
2028இல் நாடு என்ற ரீதியில் 5.5 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. அந்த இலக்கை நோக்கி பயணிப்பதற்கு தற்போதுள்ள பொருளாதார வளர்ச்சி வேகம் போதுமானதா என்று சிந்திக்க வேண்டும்?

இது தொடர்பில் அவதானம் செலுத்தாவிட்டால் நாடும் மக்களும் மீண்டும் பாதாளத்தில் விழ வேண்டிய நிலைமையே ஏற்படும்.
 
 இன்று நாட்டில் மக்களுக்கு வாழ முடியாத சூழல் காணப்படுகிறது. பொருட்களின் விலைகள் அதிகரித்து வாழ்க்கை செலவும் அதிகரித்துள்ளது. அதேநேரம் மக்களுக்கான வருமான மூலங்களும் இல்லாமலாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டிலேயே இருக்கின்றனர். தொழிற்சாலை கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அந்த பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதே எதிர்க்கட்சிகளின் பொறுப்பாகும். நாட்டின் அபிவிருத்திக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் அனைத்து முற்போக்கு சக்திகளுடனும் கொள்கை ரீதியில் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.