மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யத் தேடப்பட்டு வரும் சம்பத் மனம்பேரி, நீதிமன்றில் சரணடைய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி நேற்று(15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் அறிவித்துள்ளார்.
சம்பத் மனம்பேரி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பியல் மனம்பேரியின் சகோதரர் ஆவார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்றையும் எம்பிலிப்பிட்டி பொலிஸார் அண்மையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் 2025 ஆம் ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில், 500 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான சொத்துக்கள்த ற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சொத்துக்களே அதிகளவில் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் சில அரசியல்வாதிகளின் சொத்துக்களும் உள்ளடங்குகிறது.
அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குற்றச் செயல்களின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்களை முடக்கும் சட்டத்தின் அடிப்படையில் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களது சொத்துக்களை பொறுப்பேற்று பராமரிப்பதற்காக விசேட அதிகார சபையொன்றை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்தெரிவித்துள்ளார்.