'முழுமையான வெற்றி வரை போராடுவோம் .." : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் சூளுரை

சர்வதேச அளவில் கண்டனங்கள் அதிகரித்தபோதும் தெற்கு காசாவில் ரபா மீதான “வலுவான” இராணுவ நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதில் இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது. எனினும் 1.5 மில்லியன் பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இந்த நகர் மீதான தாக்குதல் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச அளவில் எச்சரிக்கைகள் வலுத்து வருகின்றன.

அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து வெளியிட்டிருக்கும் கூட்டு அறிக்கையில், “இந்தப் பாதையில் செல்ல வேண்டாம்” என்று இஸ்ரேலை வலியுறுத்தி இருப்பதோடு, பாரிய மனித உயிரிழப்புகளை தவிர்க்கும்படி கேட்டுள்ளன.

“இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்துவது அழிவுகரமாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கும் அந்த நாடுகள், “பொதுமக்கள் செல்வதற்கு வேறு இடம் இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளன.

வடக்கு மற்றும் தெற்கு காசாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இடைவிடாத தாக்குதல்களால் துரத்தப்பட்ட மக்களே தற்போது எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் சிக்கியுள்ளனர்.

வெளிநாடுகள் மற்றும் உதவி நிறுவனங்களின் அழுத்தங்கள் அதிகரித்தபோதும் ரபாவை நோக்கி முன்னேறி ஹமாஸ் படைப்பிரிவை ஒழிப்பதாக இஸ்ரேல் உறுதியாகக் கூறி வருகிறது.

“நாம் முழுமையான வெற்றி வரை போராடுவோம் என்பதோடு போர் வலயங்களில் இருந்து பொதுமக்களை வெளியேறுவதற்கு நாம் அனுமதித்த பின் ரபாவிலும் வலுவான படை நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த புதனன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு மத்தியஸ்தர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே நெதன்யாகுவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.