பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, பாதாள உலகத் தலைவர் கஞ்சிபாணி இம்ரான், படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்புக்களை மேற்கோள்காட்டி பெரும்பான்மை ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளன.
இது குறித்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தேசபந்து தென்னகோனுக்குத் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட பிறகு, அவருக்கு வழங்கப்பட்ட முந்தைய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
மேலும் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பிறகு, முந்தைய பாதுகாப்பு இன்னும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதேநேரம் நாட்டில் இதுவரை நான்கு மாதங்களில் 38 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இலங்கையில் பாதாள உலக வன்முறைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலான சம்பவங்கள் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலிருந்து பதிவாகியுள்ளன என்றும் அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் பெருகிய மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகள் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு இடையே அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் போட்டியானது, பாதாள உலகக் கும்பல்களின் இலக்கு வைத்து இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாகவே வன்முறைக்கு வழிவகுத்துள்ளதாக சட்ட அமுலாக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குற்றச் செயல் வலையமைப்புகளை அகற்றவும் மேலும் இரத்தக்களரிகளைத் தடுக்கவும் பொலிஸ்; தரப்பு முயற்சிகளை தற்போது முடுக்கி விட்டுள்ளதாகவும் சுட்டக்காட்டப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான சமூக ஒத்துழைப்பு மற்றும் சட்டமன்ற ஆதரவையும் அதிகாரிகள் கோரியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.