'இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார" : இந்திய உளவுப் பிரிவு கூறியதாக தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என்று இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று( 08.02.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

“எங்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார இந்தியாவுக்கு வெறுமனே செல்லவில்லை.

 இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்த காரணத்தினாலேயே அவர் அங்கு சென்றுள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார என்று இந்திய ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதன் காரணமாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 அந்த வகையில் அடுத்த அரசாங்கம் எமது தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி தலைமையிலான அரசாங்கமாகத் தான் இருக்கும்” என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர், இந்தியாவின் குஜராத்தில் அமைந்துள்ள அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

அமுல் பால் உற்பத்தி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, தேசிய பால்வள மேம்பாட்டுத்துறையின் தலைவர் மற்றும் பால்பண்ணைத் துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பது, பால் பொருட்களின் விலையைக் குறைப்பது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.