'காசா போரை சில நாட்களுக்கு நிறுத்துங்கள்.." : அமெரிக்க பைடன் வலியுறுத்தல்

 காசா போரை சில நாட்களுக்கு நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

 இதில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 5,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. வடக்கு காசா பகுதியில் தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது.

'இஸ்ரேல் இராணுவ தாக்குதல்களில் இதுவரை 9,061 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,760 பேர் குழந்தைகள் என்பதோடு 2,326 பேர் பெண்கள் ஆவர். இதுவரை சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக' பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்,

இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் இடையிலான போரில் அப்பாவி மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க காசாவில் சில நாட்களுக்கு போரை நிறுத்த வேண்டும்.

காசாவில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்க முன்னுரிமை அளித்துவருகிறோம். எகிப்து எல்லை வழியாக அவர்கள் வெளியேற நடவடிக்கை எடுத்து வரும் அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என ஜோ பைடன் தெரிவித்தார்.