'டொலருக்கு பதிலாக இலங்கையில் இந்திய, சீன, ரஷ்ய நாணயங்கள்.." : வழங்கப்பட்ட ஆலோசனை

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க டொலருக்குப் பதிலாக சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளின் நாணயங்களுடன் இணைந்து செயற்படுவது இலங்கைக்கு நன்மை பயக்குமென முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க டொலர் தடை அவசியமா என்ற தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர்,

அமெரிக்க பொருளாதாரத்தின் வலிமை காரணமாக சர்வதேச நாணயமாக டொலரின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருவதாகவும் ஆனால் டொலர் இப்போது ஒரு சவாலை எதிர்கொள்கிறது என்றும் குறிப்பிட்டார்.

சமீபத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகள் பொருளாதார சக்திகளாக உருவெடுத்துள்ளதாகவும் சீனா, ரஷ்யா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகள் உலக மக்கள் தொகையில் 40 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இது ஒரு பெரிய சந்தைப் பங்கு என்றும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு பிரிக்ஸ் நாடுகளில் நிகழ்கிறது என்றும் பிரிக்ஸ் நாடுகள் தங்கள் சொந்த சர்வதேச நாணயத்திற்கான திட்டத்தை முன்வைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அரசியல் விரோதம் காரணமாக இது இன்னும் யதார்த்தமாகவில்லை.

இலங்கையின் பெரும்பாலான இறக்குமதிகள் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து வருவதால், சீன யுவான், இந்திய ரூபா மற்றும் ரஷ்ய ரூபிள் போன்ற ஒற்றை நாணயத்தில் சர்வதேச வர்த்தகத்தை நடத்துவது எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் ஏற்றுமதிகள் முக்கியமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கானவை என்றும் எனவே டொலரிலிருந்து விலகிச் செல்வது எளிதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை திடீரென டொலர் மதிப்பைகுறைத்தால், அது ஆடைகள், தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதியைத் தடுக்கக்கூடும் என்றும் டொலரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு திட்டம், நாட்டின் ஏற்றுமதி பொருளாதார கட்டமைப்பை மாற்றும் நீண்டகால பொருளாதாரத் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்