'முடிந்தால் பாராளுமன்ற மைதானத்துக்குள் வந்து வெட்டுங்கள்.." : அம்பிட்டிய தேரருக்கு விடுக்கப்பட்ட சவால்

தமிழர்களை வெட்டுவேன் என கூறிய அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் முடிந்தால் முதலில் எங்களை வெட்டி வீழ்த்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சவால்; விடுத்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்த அவர்,

அனைவரையும் வெட்டி வீசுவேன் என்று கூறும் அந்த தேரர் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். நான் அந்த தேரருக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். பாராளுமன்ற மைதானத்திற்கு வாருங்கள். அங்கு தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

முதலில் எங்களை வெட்டி வீசுங்கள். எங்களுடைய பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் நாங்கள் பாராளுமன்ற மைதானத்திற்கு வருகின்றோம்.

அவர் பௌத்த துறவியாக இருக்கின்றார். இருப்பினும் அவர் பேசும் வார்த்தைகளும் அவரது நடவடிக்கைகளும் அந்த மதத்திற்கு இழுக்கைத் தேடி தருகின்றது. அவர் அணிந்திருக்கும் காவி உடைக்கு இழுக்கைத் தேடித் தருகின்றது“

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் ஒரு பெரும்பான்மை இன மதகுரு ஒருவர் தமிழர்களை வெட்டுவேன் என கூறுவதை ஏன் இந்த அரசாங்கம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

அவருக்கு எதிராக ஏன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏன் அம்பிட்டிய தேரர் கைது செய்யப்படவில்லை. சட்டம் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார்.