ஈபிடிபி மற்றும் டக்ளஸ் தேவானந்தா தொடர்பான கொலை குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு எத்தகைய கொலை மிரட்டல் வந்தாலும் என்னை கொலை செய்தாலும் பரவாயில்லை. அதற்கு முகம் கொடுத்து விசாரணைக்கு ஆஜராக நான் தயார் என ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினர் சதா என அழைக்கப்படும் சுப்பையா பொன்னையா தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர்,
தங்களிடம் ஆயுதம் இல்லை. அலுவலகத்தை தோண்டி பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆயுதத்தை யாரிடம் கொடுத்தார்கள்? நான் வரும்பொழுது ஆயுதம் இருந்தது. கொலை சம்பவங்கள் தொடர்பில் நானே அந்த இடங்களை காட்ட வேண்டும். வேறுயாரும் சொல்லி நம்பபோவதுமில்லை.
சிலபேருக்கு தெரியாது. பலர் பயத்தில் முன்வரமாட்டார்கள். நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம். இரண்டில் ஒன்றை காண வேண்டும்.
சொப்பின் பையுடன் வந்தவரிடம் தற்போது கோடிக்கான சொத்துக்கள் இருக்கிறது. டக்ளஸ் தேவானந்தாவிடம் கோடிக்கணக்கான பணம் தற்போது சுவிஸிலும் வெளிநாட்டிலும் இருக்கிறது.
கடந்த காலத்தில் ஈபிடிபியில் இருந்து பத்துபேரை பாராளுமன்றத்துக்கு அனுப்பினோம். அவர்களுக்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது.
300 , 500 வாக்குகளில் அவர்கள் பாராளுமன்றம் சென்றார்கள். வாக்குச்சாவடியில் வாக்குச் சீட்டுகளை எடுத்து கீறிட்டு 15 நிமிடத்தில் வாக்குப்பெட்டிகளை நிரப்பினோம்.
அவ்வாறு செய்து நாம் அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம். அவர்கள் நன்மை செய்யாமல் அவர்கள் பணக்காரராகிவிட்டார்கள்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக அப்போதைய அரசாங்கத்தின் மேல் மட்டத்துக்கு தெரிந்திருக்கும். கீழ்மட்டத்திற்கு தெரியாமல் மேல் மட்டத்தினர் செய்திருக்கலாம்.
அதனை நாம் இல்லை என கூற முடியாது. எந்த அரசாங்கமும் வந்தாலும் இவர்கள் ஜனாதிபதி போன்றே செயற்பட்டார்கள்.
மிரட்டலுக்கு பயந்து நாம் இருக்கவில்லை.பயந்து இருப்பது என்று சொன்னால் நாங்கள் தனியாக யாழ்ப்பாணத்திற்கு வரவும் மாட்டோம். இருந்தாலும் செத்தாலும் எமக்கு பயமில்லை.
கொலை குற்றங்கள் சம்பந்தமான விசாரணைகள், முறைப்பாடுகள் அழைப்பாணையை விடுத்தால் நான் எந்த பொலிஸிலும்ஆஜராக தயார் என்றார்.
இதேநேரம் டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் ' நிமலராஜன்,அற்புதன் . நிக்கிலாஸ் ஆகியோரை ஈ.பி.டி.பி தான் படுகொலை செய்வது என்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.இதற்கான விசாரணைகள் இடம்பெறுமா, என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் பாராளுமன்றில் நேற்று கேள்வியெழுப்பியுள்ளார்.