'அனைவரையும் விடுவியுங்கள்..." ஹமாஸ் படையிடம் 18 நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள்

பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா உட்பட 18 நாடுகளின் தலைவர்கள் ஹமாஸ் படைகளுக்கு முன்வைத்துள்ளனர்.

 அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸ் படைகள் இஸ்ரேலிய மக்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து மிகக் கொடூரமான போர் வெடித்தது.

 
ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிப்பதே இலக்கு என்றும் இஸ்ரேல் தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, போர் தொடங்கி 200 நாட்கள் கடந்ததை அடுத்து, 18 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

எஞ்சியிருக்கும் பணயக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க முன்வர வேண்டும் என்று அதில் கோரியுள்ளனர்.
பணயக்கைதிகளை விடுப்பதனால் போர்நிறுத்த சூழல் உருவாகும் என்றும், காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க வாய்ப்பாக அமையும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
 
அக்டோபர் தாக்குதலை அடுத்து சுமார் 250 பேர்களை ஹமாஸ் படைகள் பிடித்துச் சென்றிருக்கலாம் என இஸ்ரேல் தரப்பு குறிப்பிட்டுள்ள நிலையில், தற்போது 129 பேர்கள் வரையில் எஞ்சியிருக்கலாம் என்றே தெரிவிக்கின்றனர்.

அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த எதிர்பாராத தாக்குதலில் 1,170 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அதற்கு பதிலடி அளித்த இஸ்ரேலிய தாக்குதலால் இதுவரை 34,305 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறார்கள் என்றே கூறப்படுகிறது.