'காணாமல் ஆக்கப்பட்ட 10 பேர் கண்டுபிடிப்பு' - அரசாங்கத்தின் அறிவிப்பை மறுதலிக்கும் உறவுகள்


காணாமல் ஆக்கப்பட்ட பத்துபேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால், அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எவையும் தங்களிடம் இல்லை என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வவுனியாவில் அவர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை இன்று நாம் நினைவுகூருகிறோம்.

சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப் போருக்கு முன்னும், பின்னும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

எனவே சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதன் மூலமே நாம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை பற்றிய உண்மையினை வெளிப்படுத்த முடியும்.

அத்துடன் 40ஆண்டுகளுக்கும் மேலாக, கணிசமான எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்களைக் கைது செய்வதற்கு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இலங்கை நம்பியுள்ளது. இது தமிழ் சமூகத்திற்கு ஆழ்ந்த அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது.

இதுவே பரந்தளவிலான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது.

போரின் போதும் அதற்குப் பின்னரும் துணை இராணுவக் குழு ஒன்று வன்னியில் உள்ள தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து இளைஞர்கள் மற்றும் சிறுமிகளை தேர்ந்தெடுத்தது. அந்த துணை இராணுவப் படைத் தலைவர் இப்போது எம்.பி.யாக இருப்பது எமக்கு வருத்தம் அளிக்கிறது.

சிறிலங்கா இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பல தமிழ் குழந்தைகள் அருகில் உள்ள புத்த மடங்களில் பயிற்சி பெற்று இளம் பௌத்த பிக்குகளாய் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிங்களக் குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு இப்போது சிங்களவர்களாகவே வாழ்கிறார்கள்.

காணாமல் போன 10 பேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் கடந்த வாரம் எங்களுக்கு அறிவித்தனர். அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எங்களிடம் இல்லை.எனினும், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் உண்மையில் பாதுகாப்பாகவும் உயிருடன் இருப்பதாக நாங்கள் கூறிய விடயம் இதன்மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

தமிழர் இறையாண்மையை அங்கீகரிப்பதற்காக எமது தமிழ்த் தலைவர்களும், மக்களும் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலியுறுத்த வேண்டும். இது நம் குழந்தைகளை தேடுவதற்கு உதவும்.

தமிழ் இனத்திற்கான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கின் பங்களிப்பை நாம் பாராட்டுகின்றோம்.

அவர் சர்வதேச இராஜதந்திரிகளுடன் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான உதவியை எமக்கு செய்யவேண்டும். அங்கு தமிழர் இறையாண்மைக்கான எங்கள் விருப்பத்தை திறம்பட வெளிப்படுத்த முடியும்” என்றனர்.