'இங்கே போயிஸ் நிற்கிறார்கள்.. அங்கே செல்லுங்கள்" என்று மாத்திரமே கூறினேன் : 'மாணவி விவகாரத்தில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை"… - தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளர் - சிவானந்த ராஜா விளக்கம்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளரும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான சிவானந்த ராஜா முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்து நேற்று மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  தனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மாத்திரமே அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.