நாட்டில் இடம்பெற்ற முக்கிய குற்றச் சம்பவங்களுக்கு மூளையாக செயற்பட்டவர் என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி, நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அவரிடம் குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வரும் தீவிர விசாரணைகளில் முக்கிய பல விடயங்களை வெளிப்படுத்தி வருகின்றார்
கொழும்பு நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்னர் நிதி வசதியில்லாத பெண் ஒருவருக்கு பண உதவி செய்ததாக இஷாரா தெரிவித்துள்ளார்.
சஞ்சீவ கொலையின் போது நீதிமன்றத்திற்கு சென்ற தன்னை உண்மையான வழக்கறிஞர் என எண்ணிய பெண் ஒருவர், தன்னை வழக்கு ஒன்றை வாதாட அழைத்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
“கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ய கமாண்டோ சலிந்துவுடன் நீதிமன்றத்திற்கு வந்தபோது, வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில் இருந்தேன். அங்கு வந்த மிகவும் உதவியற்ற தோற்றமுடைய ஒரு பெண் என்னிடம் வந்து கதைத்தார்.
நான் ஒரு வழக்கறிஞர் என்று அவர் நினைத்தார். அந்தப் பெண்ணின் கணவர் அவரை மோசமாக அடிப்பதாகவும் இதுதொடர்பான வழக்கு புதுக்கடை நீதிமன்றத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தன்னிடம் ஆயிரம் ரூபாய் மாத்திரமே உள்ளது. அந்தத் தொகைக்கு வழக்கில் வாதாட முடியுமா எனவும் குறித்த பெண் தன்னிடம் கேட்டதாக செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் வேறொரு வழக்கிறக்காக வாதாடவுள்ளதாக கூறினேன். அதனால் நான் அந்த பெண்ணின் வழக்கை அங்கிருந்த மற்றுமொரு பெண்மணியிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு, என் பார்வையில் இருந்த மற்றொரு பெண் வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றேன்.
அந்தப் பெண் வழக்கறிஞரிடம் சென்று தனது கதையைச் சொன்னார். வழக்கில் முன்னிலையாக 2000 ரூபாய் கேட்டார். அந்த பெண் மிகவும் உதவியற்றவராக என்னைப் பார்த்தார்.
நான் அவரை அறையிலிருந்து வெளியே அழைத்து, என்னிடம் இருந்த 5000 ரூபாயை கொடுத்து, அந்தப் பெண் சட்டத்தரணியை வழக்கில் வாதாட அழைக்குமாறு கோரினேன். அந்த பெண் என் கைகளைப் பிடித்து கதறி அழுததோடு, வணங்கி பணத்தையும் பெற்றுக் கொண்டார்” என இஷாரா குறிப்பிட்டுள்ளார்.