”ஒருபோதும் மண்டியிடாது” என அமெரிக்காவுக்கு சீனா வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் டொனால்ட் ட்ரம்ப், நேற்றுடன் 100 நாளை நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில், அண்மையில் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை அமுல்படுத்தியிருந்தார்.
கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி முதல் அந்த வரிவிதிப்பு தொடங்க வேண்டிய நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.
எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்த அவர், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பை உயர்த்தினார்.
பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தியது.
தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145வீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125வீதமாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்கா 245 சதவீதமாக்கவும் முயற்சித்தது.
இதனிடையே, ”எதிர்வரும் காலத்தில் சீனாவின் வரிவிதிப்பு விகிதம் குறைக்கப்படும்” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ”சீனா பேச்சுவார்த்தை நடத்தினால் வரிவிதிப்பு நடவடிக்கை மெதுவாக குறைக்கப்படும்” எனவும் தெரிவித்திருந்தார். என்றாலும், சீனா அதைக் கவனத்தில் கொள்ளவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரை கண்டித்து, சீனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ”ஒருபோதும் மண்டியிடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவில், "அமெரிக்கா உலகளாவிய வரி புயலைக் கிளப்பி, வேண்டுமென்றே சீனாவை குறிவைத்துள்ளது. இது, ஏனைய நாடுகளுடன் '90 நாள் இடைநிறுத்தம்' விளையாட்டை விளையாடி, சீனாவுடனான வர்த்தகத்தை மட்டுப்படுத்த கட்டாயப்படுத்தியுள்ளது.
ஒரு கொடுமைக்காரனுக்கு அடிபணிவது என்பது தாகத்தைத் தணிக்க விஷம் குடிப்பது போன்றதாகும். அது நெருக்கடியை மேலும் ஆழமாக்குகிறது. சமரசம் உங்களுக்கு கருணையைப் பெற்றுத் தராது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. மண்டியிடுவது மேலும் கொடுமைப்படுத்துதலை மட்டுமே அழைக்கிறது. சீனா மண்டியிடாது பின்வாங்காது.
ஆனால் பலவீனமானவர்களின் குரல்கள் கேட்கப்படும். உலகின் பிற பகுதிகள் ஒற்றுமையுடன் ஒன்றாக நிற்கும்போது, அமெரிக்கா ஒரு சிறிய சிக்கித் தவிக்கும் படகு மட்டுமே. மூடுபனியைத் தகர்த்து, முன்னோக்கிச் செல்லும் பாதையை ஒளிரச் செய்ய, கையில் தீபத்துடன் யாராவது முன்னோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, உலகளாவிய பார்வையாளர்களுக்கான செய்தியை விரிவுபடுத்தும் வகையில், ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அமெரிக்காவின் அதிகார வர்க்கத்தையும் மேற்கோள் காட்டியுள்ளது.