''எனது மகனான கெஹல்பத்தரவை சிஐடி க்கு வெளியில் அழைத்து வர வேண்டாம்.." தாய் நீதிமன்றில் அவசர கோரிக்கை



பாதாள உலக குழு தலைவரான கெஹல்பத்தர பத்மேவின் தாயார், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் தனது மகன் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

மகனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடுப்பு உத்தரவு சட்டவிரோதமானது என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 

அதன்படி, ஆட்கொணர்வு மற்றும் ரிட் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் உத்தரவு ஒன்றைக் கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

வழக்கின் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தனது மகனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வெளியே உள்ள எந்த இடத்திற்கும் மாற்றுவதைத் தடுக்க, இடைக்கால நிவாரணத்தைக் அவர் கோரியுள்ளார்.

 
அதன்படி, இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் விடயங்கள் ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்படும் வரை கைதி வேறு இடத்திற்கு மாற்றப்பட மாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சட்டத்தரணி நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

 
கைதியை திணைக்கள வளாகத்தில் தடுத்து வைத்திருக்கும் போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் அனைத்து விசாரணைகளும் அங்கேயே நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இதேநேரம் கெஹெல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மற்றொரு துப்பாக்கி ஊரகஸ் சந்தி பகுதியில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.

 ஊரகஸ் சந்தி பொலிஸ் பிரிவில் உள்ள கிளை வீதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மைக்ரோ ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பெட்டி ஒன்றும் பொலிஸார் காவலில் எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

இதேநேரம் போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக குழு தலைவருமான கெஹெல்பத்தர பத்மே என்பவரின் மேலும் இரு ஆயுதங்கள் கொஸ்கொட பகுதியிலும் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  

 கொஸ்கொடை பகுதியில் உள்ள குறுக்கு வீதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பத்மே வெளிப்படுத்திய நிலையில் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேநேரம் பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தர பத்மே' மறைத்து வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட டீ-56 ரக தோட்டாக்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் கடந்த கிழமை மீட்கப்பட்டது
இதன்போது, டீ-56 ரக 4 மெகசின்களும், மைக்ரோ பிஸ்டலையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.