''ரபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம்" பெஞ்சமினிடம் உறுதியாக கூறிய பைடன்

தெற்கு காசாவின் ரபா நகர் மீது, இஸ்ரேல் படை தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில் அதற்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு முறை எச்சரித்திருப்பதோடு, அவ்வாறான படை நடவடிக்கை ஒன்றினால் வெளியேற்றப்படும் பலஸ்தீனர்களை ஏற்பதற்கு எகிப்து தயாராகி வருகிறது.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமாக 1.5 மில்லியன் பேர் எகிப்து எல்லையை அண்மித்து இருக்கும் சிறு நகரான ரபாவில் சிக்கியுள்ளனர்.

இந்த நகர் மீது வலுவான இராணுவ நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வியாழனன்று (15) நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதன்போது பொதுமக்களை பாதுகாக்கும் திட்டம் ஒன்று இன்றி ரபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை கூறியது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து, “காசாவுக்கு இராணுவம் நுழைந்தால் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ள மனிதாபிமான பேரழிவு பெரும் கவலை அளிக்கிறது” என்று குறிப்பிட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ரபா மீது தாக்குதலை தொடுக்க வேண்டாம் என இஸ்ரேலை வலிறுயுத்தி பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தன.

“நாங்கள் காசா நகரில் இருந்து தெற்குக்கு இடம்பெயர்ந்தோம்” என்று கூறிய அஹ்லம் அபூ அஸ்ஸி, “(பின்னர்) ரபாவுக்குச் செல்லும்படி அவர்கள் எமக்குக் கூறினார்கள், எனவே நாம் ரபா சென்றோம்.

போவதும் வருவதுமாக எம்மால் இருக்க முடியாது. இங்கு எமக்கு பாதுகாப்பான எந்த இடமும் இல்லை” என்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இதேநேரம் ரபாவில் இஸ்ரேலிய தாக்குதலால் வெளியேறும் பலஸ்தீன அகதிகளை ஏற்கும் வகையில் எகிப்து எல்லையில் பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

எனினும் அவ்வாறான தயார்படுத்தல்கள் பற்றிய செய்தியை மறுக்கும் எகிப்து காசாவில் இஸ்ரேலின் பேரழிவு நடவடிக்கைகளால் பலஸ்தீனர்கள் எகிப்தின் சினாய் பகுதிக்குள் நுழையும் வாய்ப்பு பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இதனை எகிப்து முற்றாக நிராகரித்து வருவதோடு ஜோர்தான் போன்ற அரபு நாடுகளும் இதனை எதிரொலிக்கின்றன.

பலஸ்தீனர்களை காசாவுக்கு வெளியில் இடம்பெயரச் செய்வதை அமெரிக்காவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இவ்வாறான நெருக்கடிச் சூழலை தவிர்ப்பதற்கு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த எகிப்து தீவிரமாக ஈடுபட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் எகிப்து எல்லையில் அது தற்காலிகமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

--