“நிச்சயமாக மற்றொரு மனிதாபிமான பேரழிவு ஏற்படும்” : ரபாவில் உள்ள மக்கள் குறித்து எச்சரிக்கை

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் சிக்கியுள்ள காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வரும் நிலையில், ஹமாஸ{டன் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தமும் அதிகரித்து வருகிறது.

போர் நிறுத்தம் ஒன்றுக்கான புதிய சுற்று பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் முயற்சியாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸ் கடந்த செவ்வாய்கிழமை எகிப்து தலைநகர் கெய்ரோவை சென்றடைந்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் தலைவர் டேவிட் பார்னியும் கெய்ரோ செல்லவிருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

பொதுமக்களை பாதுகாப்பதற்கான திட்டம் இன்றி ரபா நகர் மீது இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு திட்டமிடுவது பற்றி அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே சி.ஐ.ஏ. தலைவரின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.

ஏற்கனவே இஸ்ரேலின் தாக்குதல்களால் துரத்தப்பட்டு தற்போது எகிப்துடனான எல்லையில் உள்ள இந்த சிறு நகரில் அடைக்கலம் பெற்றிருக்கும் பலஸ்தீன அகதிகள் தொடர்ந்து அங்கிருந்து எங்கு செல்வது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“இங்கே குண்டு வீச்சுகள், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் நாம் எங்கே போவது” என்று ரபாவுக்கு இடம்பெயர்ந்து வந்திருக்கும் பலஸ்தீன பெண் ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றிருக்கும் ஜோர்தான் மன்னர் இரண்டாவது அப்துல்லா நேற்றுமுன்தினம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார். இதன்போது “ரபாவில் உள்ள பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பைடன் குறிப்பிட்டார்.

“வன்முறை இடம்பெறும் வடக்கில் இருந்து பல மக்களும் இடம்பெயர்ந்தும் பலமுறை இடம்பெயர்ந்தும் தற்போது ரபாவில் நிரம்பி உள்ளனர். அவர்கள் அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர்” என்று பைடன் குறிப்பிட்டார்.

நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் இறுதியான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழுத்தம் கொடுத்த மன்னர் அப்துல்லா, ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் “நிச்சயமாக மற்றொரு மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தும்” என்ற எச்சரித்தார்.

“ரபா பகுதியில் மேலும் தீவிரமான மனிதாபிமான நெருக்கடி ஒன்றை தடுக்கும் வகையில் முடியுமான விரைவில் இராணுவ நடவடிக்கையை நிறுத்தும்படி” இஸ்ரேலை சீனா வலியுறுத்தியுள்ளது.

போர் நிறுத்தம் ஒன்றுக்காக கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பு முன்வைத்த நிபந்தனைகளை நிராகரித்த இஸ்ரேல் ரபா நகர் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த திங்கட்கிழமை அந்த நகரில் இடம்பெற்ற தாக்குதல்களில் 100க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதன்போது இரு பணயக்கைதிகளை விடுவித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.