கடமையை செய்ய முயன்ற போக்குவரத்து பொலிஸாரை, இளைஞர்கள் சிலர் வீட்டுக்குள் இழுத்துச் சென்ற சம்பவம் திருகோணமலையில் பதிவாகியுள்ளது.
திருகோணமலை நிலாவெளி உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் அதிக சத்தத்தை எழுப்பிய குற்றச்சாட்டில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்ய முயற்பட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த சில இளைஞர்கள் பொலிஸாரை தமது கடமையை செய்ய விடாது தடுத்துள்ளனர்.
மேலும் குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரையும், இளைஞர்கள் சிலர் வீதியிலிருந்து வீடொன்றுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நிலாவெளி அடம்போடை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்