நேற்றுடன் 9 மாதங்கள் நிறைவு - அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை

காசா போர் நேற்றுடன் (07) ஒன்பதாவது மாதத்தை எட்டிய நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் காசாவெங்கும் நீடிப்பதோடு குறிப்பாக மத்திய காசாவில் குண்டு மழை பொழிந்து வருகிறது.

 மாத்திய காசாவில் உள்ள ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் அங்கு அடைக்கலம் பெற்றிருந்த பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் நேற்றும் அகதி முகாம்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் கடுமையாக தாக்கின.

இந்தப் போரினால் காசா முழுவதும் சின்னாபின்னமாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லட்டிருப்பதோடு அங்குள்ள 2.4 மில்லியன் மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

கடந்த நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்திற்குப் பின்னரான முதல் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட மூன்று கட்ட போர் நிறுத்தத்தை ஒட்டியே புதிய முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

என்றாலும் கடந்த 2007 தொடக்கம் காசாவில் ஆட்சி புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு பைடனின் திட்டத்திற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் தனது போர் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்திவரும் இஸ்ரேல், பேச்சுவார்த்தைகளுக்கான விருப்பத்தையும் வெளியிட்டு வருகிறது.

காசாவெங்கும் இஸ்ரேலின் தாக்குதல்கள் இடம்பெற்றபோதும் அது மத்திய காசாவில் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக புரைஜ் மற்றும் மகாஸி அகதி முகாம்கள் மற்றும் டெயிர் அல் பலாவிலும் இஸ்ரேல் தரை மற்றும் வான் வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இங்கு கடந்த வியாழக்கிழமை இரவு வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டெயர் அல் பலாஹ்வில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு புரைஜில் இடைவிடாது குண்டுகள் வீசப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக முன்னெச்சரிக்கை இன்றி சனநெரிசல் மிக்க பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இவ்வாறு கடந்த வியாழனன்று நுஸைரத் முகாமில் உள்ள ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதல்களில் 40க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல் மக்கள் எதிர்கொண்டு வரும் பயங்கரத்திற்கு மற்றொரு உதாரணம் என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.