யாழில் பெருந்துயரம் : குழந்தையை கட்டி அணைத்தவாறு தாய் : மீட்கப்பட்ட எலும்பு கூடுகள்

 
 
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் போது பெரிய எலும்புகூடொன்றுடன் சிறிய குழந்தையின் எலும்பு கூடொன்று அணைக்கப்பட்ட விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தாயினதும் பிள்ளையினதும் எலும்பு கூடுகளாக இருக்கலாமெனக் கருத்தப்படுகிறது.
அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில் நடைபெற்றுவரும் செம்மணி மனிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இரண்டாம் கட்டத்தின்25 ஆவது நாள் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சட்டத்தரணிரனித்தா ஞானராஜா
விசேடமாக நேற்றைய தினம் அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது ஒரு பெரிய மனித எலும்புக் கூட்டோடு சிறிய குழந்தையினுடைய மனிதஎலும்பு கூடு அரவணைக்கப்பட்ட விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அது சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு நேற்று காலைமுழுமையாக அகழ்ந்த எடுக்கப்பட்டது. இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் புதிதாக 4 எலும்பு கூட்டுகள்அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூடுகளில் 3 முற்றாக அகழ்ந்து எடுக்கப் பட்டதாகவும் தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழியில் சிறிய,பெரிய எலும்பு கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில் அரவணைத்த எலும்புக் கூடுகள்மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.இது தாயினதும் பிள்ளையினதும் எலும்பு கூடுகளாக இருக்கலாமெனக்கருத்தப்படுகிறது.

இதேநேரம் யாழ்ப்பாணம் செம்மணிக்கு அருகில் நாவற்குழி பகுதியில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட பெண் ஒருவர் உட்பட 24 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை,எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு யாழ்.குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் வந்த நிலையில் நாவற்குழி பகுதியில் ஜூலை 19 ஆம் திகதி இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு பின்னர் இந்த 24 பேரும் காணா மல் ஆக்கப்பட்ட நிலையில், அவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் குறித்த வழக்கானது தீர்ப் புக்காக நேற்று புதன்கிழமை திகதியிடப் பட்டது. எனினும் நேற்றையதினம் நீதிவான் விடு முறையில் இருந்ததால் எதிர்வரும் ஆகஸ்ட்மாதம் 28 ஆம் திகதி இந்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது. நாவற்குழியானது செம்மணி பகுதியின் எல்லையில் உள்ள பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஊடகவியலாளர்களை இங்கு மாலையிலேயே அனுமதிப்பர். பெரிய எலும்புகூடொன்றுடன் சிறிய குழந்தையின் எலும்புகூடொன்று அணைத்தாவாறு கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக காலையிலேயே அவைமுழுமையாக அகழ்ந்த எடுக்கப்பட்டு விட்டதால் ஊடகவியலாளர்களால் அந்தப் புகைப்படங்களை எடுக்க முடியவில்லை.