யாழ் பல்கலை வளாகத்தில் பரபரப்பு : தொடர்ந்து மீட்கப்படும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நேற்று (30) இரண்டு மகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன.

மீட்கப்பட்ட பொருட்கள் 

இதையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பொருட்களை காவல்துறையினரும், விசேட அதிரடிப் படையினரும் இன்று (31) காலை அகற்றினர்.

பின்னர் மீண்டும் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடந்தபோது, அதன் அருகில் ரி-56 ரக துப்பாக்கி, இரண்டு மகசின்கள், வயர்கள் உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மீண்டும் காவல்துறையினருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில், அப்பகுதியை முழுமையாகச் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.