யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த குடும்பஸ்தர்: பெண் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna)- மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (2) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வத்திராயன் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த (20) ஆம் திகதி இரவு வேளை தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் ஓலமிட்டுள்ளார்.

இந்தநிலையில், அவர் மக்களால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை,  சம்பவத்தில் உயிரிழந்தவர், 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சரவணபவானந்தம் சிவகுமார் என்பவர் என தெரிவிக்கப்படுகிறது.