நாங்களும் வரி கட்டணுமா? ட்ரம்ப் உத்தரவால் அதிர்ச்சியில் பென்குயின்கள்!



பரஸ்பர வரி விதிப்பு முறையை அமுல்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செய்த செயல்தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
 
உலக நாடுகள் முழுவதும் அவரவர் பண மதிப்பை பொறுத்து பல்வேறு விகித வரிமுறைகள் உள்ள நிலையில், அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகள் அமெரிக்காவை சுரண்டுவதாக குற்றம் சாட்டினார்.
தங்கள் நாட்டு பொருட்களை அமெரிக்காவில் குறைந்த வரிவிதிப்பில் ஏற்றுமதி செய்யும் அவர்கள் அமெரிக்க பொருட்களுக்கு தங்கள் நாட்டில் அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து ஏனைய நாடுகளிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்தார்.
 
அதன்படி நேற்று முன்தினம் அவர் ஒவ்வொரு நாடும் அமெரிக்காவில் வணிகம் செய்ய எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்ற பட்டியலை வெளியிட்டார்.
அதில் அவுஸ்திரேலியாவின் எல்லைக்குள் அடங்கும் ஹெர்ட் ஐலேண்ட், மெக்டோனால்ட் ஐலேண்ட், நார்ஃபோல்க் ஐலேண்ட், கிறிஸ்மஸ் ஐலேண்ட் உள்ளிட்ட தீவுப்பகுதிகளுக்கும் தனித்தனியாக 10 சதவீதம் முதல் பரஸ்பர வரிவிதிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
இந்த விடயத்தை வைத்து இணையவாசிகள் டொனால்ட் ட்ரம்பபை கிண்டலடித்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் எல்லைக்குள் இருந்தாலும் அண்டார்டிகாவின் ஒரு பகுதியாக இருந்து வரும் ஹெர்ட் ஐலேண்ட் மற்றும் மெக்டோனால்ட் ஐலேண்ட் ஆகியவை முழுவதும் பனிப்பிரதேச தீவாகும்.
அதில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. பென்குயின்களும், பனிக்கரடிகளும்தான் இருக்கின்றன. ஆனால் அந்த தீவுகளை தனியாக குறிப்பிட்டு அந்த தீவுகளுக்கு 10 வீத வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.  

 
இதை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வரும் இணையவாசிகள், ட்ரம்ப் வரிவிதிப்பில் இருந்து மக்கள் மட்டுமல்ல விலங்குகளும் தப்பிக்க முடியாது என்றும், ட்ரம்ப் வரி விதித்துள்ளதால் அதிர்ச்சியடைந்த பென்குயின்கள் தற்போது தீவின் பொருளாதாரத்தை முன்னேற்ற கடுமையாக உழைக்க முடிவு செய்துள்ளதாகவும் கிண்டல் செய்து வருகின்றனர்