பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது, பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இன்னொரு பக்கம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கச்சதீவு விவகாரத்தில் அதிமுக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது
அந்தச் செய்தியில்,
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தற்போது, தமிழக மீனவர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஒரேதீர்வு கச்சத்தீவு மீட்புதான் என தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வலியுறுத்தும் இந்த சட்டசபை தீர்மானத்துக்கு அதிமுக, பாஜகவும் ஆதரவு அளித்திருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்லும் நிலையில் தமிழக சட்டசபையில், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர்மோடியின் இலங்கை பயணத்திலும் கச்சத்தீவு குறித்த பேச்சுவார்த்தை முக்கியமான இடம் பெற்றிருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியுமா? என்கிற கேள்விகளுக்கு அப்பால், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு இரண்டு நிலைப்பாடுகளுடன் கச்சத்தீவு விவகாரம்குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாம்.
இலங்கைக்கு பெருமளவு கடன் கொடுத்து வரும் நாடுகள் சீனா, இந்தியா ஆகியவைதான். சீனாவோ, இலங்கைக்கு கடன் கொடுத்துவிட்டு இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட சில பகுதிகளை நீண்டகால குத்தகைக்கு எடுத்து தன்னுடைய சுயாட்சி பகுதியாக நிர்வகித்து வருகிறது.
ஆனால் இந்தியாவோ, தொடர்ந்து பல்வேறு கட்டமைப்புக்கான நிதி உதவிகளையே செய்து வருகிறது.
தற்போது, சீனாவின் பாணியில் இந்தியாவும் இலங்கையிடம் இருந்து சிலபகுதிகளை நீண்டகால குத்தகைக்கு பெறுவது என திட்டமிட்டுள்ளதாம். அதில் ஒன்றுதான் கச்சதீவு. இலங்கைக்கு கொடுத்துள்ள
பல்லாயிரம் கோடி ரூபா கடனுக்கு ஈடாக, கச்சதீவை நீண்டகால குத்தகைக்கு தர வேண்டும் என இந்தியா தரப்பில் நெருக்கடி தரவாய்ப்புள்ளதாம்.
இந்தியாவின் பாதுகாப்புமற்றும் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கச்சதீவை நீண்டகால குத்தகையாக கேட்டுப்பெறுவதில் இந்தியாவுக்கும் சிக்கல் இல்லை; இலங்கைக்கும் சிக்கல் வராது எனவும் கூறப்படுகிறது