லண்டன் உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்துகொண்டார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் திருமணம் செய்துகொண்டார்.2019ஆம் ஆண்டு முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 50 வயதான ஜூலியன் அசாஞ்சே, நேற்று (புதன்கிழமை) சிறைச்சாலையில் கைதிகளை பார்வையாளர்கள் பார்வையிடும் நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்தார்.சிறைச்சாலையில் நடந்த திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படட்தாக அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.மேலும், திருமணத்திற்கு பின் ஸ்டெல்லா மோரிஸ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடும் காணொளி ஒன்றை விக்கிலீக்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.ஜூலியன் அசாஞ்சே, 2019ஆம் ஆண்டு அடைக்கப்படுவதற்கு முன்னர், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.2011ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் 37 வயதான ஸ்டெல்லா மோரிஸ்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.மோரிஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 2015ஆம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வநதனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.2010ஆம் மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலான இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதற்காக அசாஞ்சே, அமெரிக்காவில் தேடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.