'பொன்சேகாவுக்கு ஏன் தடைவிதிக்கவில்லை..?" என கேள்வி

 

யுத்தத்தின் போது செயற்பட்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விட்டு விட்டு அவரின் உத்தரவுகளை செயற்படுத்திய அவரின் கீழிருந்த சவேந்திரசில்வா போன்றோருக்கு பிரித்தானியாவால் தடை விதிக்க எடுத்த தீர்மானங்களில் சந்தேகத்திற்கிடமான தன்மைகள் காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

விடுதலைப் புலி டயஸ்போராக்களை மகிழ்விக்கும் வகையில், அடேல் பாலசிங்கத்தை வைத்துக்கொண்டு இந்த நாட்டை பிரிப்பதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்ட பிரித்தானியா, இப்போது எமது பாதுகாப்பு பிரதானிகளில் சிலரை இலக்காகக் கொண்டு தடைகளை விதிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த தடை ஒருபக்கத்தில் புதுமையான ஒன்றாகவும் உள்ளது. அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அவ்வாறு தடையெதுவும் இல்லை. என்ன காரணத்திற்காக அவருக்கு தடையில்லை என்றுபுரியவில்லை.
அதனை பிரித்தானியாவே கூற வேண்டும். ஆனால் சரத் பொன்சேகாவுக்கு கீழே இருந்த சவேந்திர சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமக்கு மேலுள்ள பிரதானிகளின் உத்தரவுகளை செயற்படுத்துவதையே சவேந்திர சில்வா போன்றோர் செயற்படுத்தினர். ஆனால் மேலே இருந்த பிரதானியை விட்டுவிட்டு கீழிருந்த பிரதானியையே பிடித்துள்ளனர். இதில் சந்தேகத்திற்கிடமானதன்மை உள்ளது.

1815இல் இந்த நாட்டை காலனித்துவத்திற்குள் கொண்டுவந்து, எமது அரசு உரிமையை சீரழித்து, ஊவவெல்லஸ்ஸ போராட்டம் உருவான போது இனவழிப்பை செய்த, இரத்தக்கறை படிந்த வரலாற்றை கொண்ட பிரித்தானியா மனித உரிமைகள் தொடர்பில் எங்களுக்கு கற்பிக்க வருகின்றது.
எமது தொல்பொருட்களை பிரித்தானியாவுக்கு கொள்ளையடித்து சென்றவர்கள் மனித உரிமைகள் தொடர்பில் கதைகின்றனர். இந்த வரலாற்றை அழிக்கவே இவ்வாறு இலங்கை இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது.
இதனூடாக மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டவே முயற்சிக்கின்றனர். அங்கே விடுதலைப்புலி டயஸ்போராக்கள் செயற்படுகின்றனர்.

அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காது இலங்கையில் வடக்கு, கிழக்கு எனஅமைதியை ஏற்படுத்தியுள்ள நிலைமையில் இவ்வாறு செயற்படுகின்றனர். இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கண்டிக்கவில்லை. அவ்வாறு ஒரு வசனமும் கிடையாது. அதற்கான முதுகெலும்பு இல்லை. இது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம் என்றார்.